A+ A-

வெளியானது ஆப்பிள் ஐபோன் 5..

பல மாதங்களாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபோன் 5, சென்ற வாரம், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அலுவலர் டிம் குக் தலைமையில் வெளியிடப்பட்டது. மூன்று மாடல்களில் 16ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி எனக் கொள்ளளவுகளுடன், இரண்டு ஆண்டு மொபைல் சேவை ஒப்பந்தத்துடன் முறையே 199, 299 மற்றும் 399 டாலர் செலுத்தி இதனை அமெரிக்காவில் பெறலாம். செப்டம்பர் 14 முதல் இதற்கான ஆர்டரைப் பதியலாம். செப்டம்பர் 19 முதல் வழங்கப்படும். உரிமம் பெற்ற கடைகளில் செப்டம்பர் 21 முதல் விற்பனை செய்யப்படும்.




எந்தவித சேவை கட்டுப்பாடும் இல்லாத நிலையில், சிங்கப்பூரில், இந்த போனின் 16ஜிபி மாடல், செப்டம்பர் 21 முதல் 948 சிங்கப்பூர் டாலருக்குக் கிடைக்க உள்ளது. இந்திய பண மதிப்பில் இது ஏறத்தாழ ரூ. 42,600 ஆகும். இதே போல, பிரிட்டனில் 529 பவுண்ட் என்ற விலையில் இது விற்பனை செய்யப்படும். இந்திய பண மதிப்பில் ரூ.47,000.
முதல் நிலையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்க இருக்கிறது. அடுத்த நிலையில் 100 நாடுகளில் 240 மொபைல் சேவை நிறுவனங்கள் வழியாக, வரும் டிசம்பரில், இது விற்பனை செய்ய அறிமுகப்படுத்தப்படும். அதில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். 


2007ம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் ஐபோனை அறிமுகப்படுத்தினார். இப்போது அந்த வரிசையில், ஐ போன் 5 மிகப் பெரிய அளவிலான நவீன மாற்றங்களுடன் வந்துள்ளது. இது பல புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. அலுமினியம் மற்றும் கிளாஸ் மட்டும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் தடிமன், இதுவரை ஆப்பிள் போன்களில் இல்லாத அளவிற்கு, முந்தையவற்றைக் காட்டிலும் 18% குறைவாக 7.6 மிமீ அளவில் உள்ளது. திரை, ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்புமிகு ரெடினா டிஸ்பிளேயினைக் கொண்டுள்ளது. ஒரு சதுர அங்குலத்தில் 326 பிக்ஸெல் திறன் கொண்டுள்ளது. இதில் கை ரேகை பதியாது. இதன் திரை, 0.3 அங்குலம் கூடுதலாக, 4 அங்குலமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயரம் அதிகரிக்கப்பட்டு, திரையில் மேலும் ஒரு வரி கூடுதலாக ஐகான்கள் காட்சி அளிக்கின்றன. எடை 20% குறைக்கப்பட்டு 112 கிராம் ஆக உள்ளது. 

மொத்தத்தில் இதன் பரிமாணம் 4.8 அங்குல நீளம், 2.3 அங்குல அகலம் மற்றும் 0.3 அங்குல தடிமன் ஆக உள்ளது. இதில் நானோ சிம் கார்ட் பயன்படுத்த வேண்டும். 

"அதிவேக வயர்லெஸ் சாதனம்' என செல்லமாக இந்த போன் அழைக்கப்படுகிறது. இதில் நெட்வொர்க் இணைப்பு தருவதற்கு HDPA+, DCHSPDA ஆகிய தொழில் நுட்பங்களுடன், அடுத்த சந்ததியினருக்கான 4 ஜி தொழில் நுட்பமும் இயங்குகிறது. பல்வேறு நெட்வொர்க் இணைப்புகளுக்கிடையே மாற்றிக் கொண்டு செயல்பட, கூடுதல் திறனுடன் கூடிய ஆன்டென்னா தரப்பட்டுள்ளது. மூன்று ஸ்பீக்கர்களும் மூன்று மைக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

ஏற்கனவே தரப்பட்ட 30 பின் சாக்கெட் இணைப்புக்குப் பதிலாக, நவீன தொழில் நுட்பத்தில் உருவான லைட்னிங் (Lightning) என்ற கனெக்டர் பின் தரப்பட்டுள்ளது. இது முந்தையதைக் காட்டிலும் 80% சிறியதாகும். புதிதாகத் தரப்பட்டுள்ள A 6 ப்ராசசர், முந்தையதைக் காட்டிலும் இரு மடங்கு வேகத்தில் செயல்படுகிறது. பேட்டரியின் திறனும் கூடுதலாக உள்ளது. 225 மணி நேரம் மின்சக்தியைத் தக்க வைக்கிறது. தொடர்ந்து 10 மணி நேரம் பிரவுசிங் அல்லது 8 மணி நேரம் 3ஜி பயன்பாட்டினைத் தருகிறது.

இதில் தரப்பட்டுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐசைட் கேமரா, வழக்கமான கேமராவினைக் காட்டிலும், அளவில் 25% சிறியதாக உள்ளது. 8 மெகா பிக்ஸெல் திறனில் 3264x2448 பிக்ஸெல் அளவில் படங்களைத் தருகிறது. பத்து பேர் வரை முகம் தேடி படம் எடுக்கிறது. 1080p திறனுடன் வீடியோ இயங்குகிறது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் உள்ளது. முன்புறம் உள்ள கேமரா 1.2 எம்பி திறனில் இயங்குகிறது. ஆப்பிள் தானே உருவாக்கிய மேப் வசதி, போக்குவரத்து தகவல்களையும் வழியையும் காட்டுகிறது. 

பேஸ்புக் இணைய தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தூங்கும் நேரத்தில் Do Not Disturb என செட் செய்துவிட்டு, போனின் ஒலி எதுவுமின்றி உறங்கலாம். இதன் ஆடியோ பிளேயர் AAC, MP3, AAX, AAX+, AIFF, WAV ஆகிய பார்மட்டுகளை இயக்குகிறது. வீடியோ பிளேயரில் H.264, MP4, MOV ஆகிய பைல்களை இயக்கலாம். Threeaxis gyro, accelerometer, proximity sensor, ambient light sensor, digital compass ஆகியவை தரப்பட்டுள்ளன. 

பல தொழில் நுட்ப முன்னோடி வசதிகள் தரப்பட்டாலும், இத்துறையில் தற்போது கிடைத்து வரும் புதிய வசதிகள் சில இதில் தரப்படவில்லை. என்.எப்.சி. என அழைக்கப்படும் அண்மைத் தள தகவல் தொடர்பு வசதி இல்லை. இதனால், இந்த போனைப் பயன்படுத்தி, கடைகளில் பணம் செலுத்த முடியாது. ஆனால், ஆப்பிள் தன்னுடைய பாஸ்போர்ட் மொபைல் பேமென்ட் சாட்ப்வேர் புரோகிராமினை அளிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது வேகமாகப் பரவி வரும் வயர்லெஸ் சார்ஜ் வசதியும் இதில் தரப்படவில்லை. அண்மையில் வெளியான நோக்கியா லூமியா 920 விண்டோஸ் போன் 8, இந்த வசதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் இணைய தளம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தூங்கும் நேரத்தில் Do Not Disturb என செட் செய்துவிட்டு, போனின் ஒலி எதுவுமின்றி உறங்கலாம். இதன் ஆடியோ பிளேயர் AAC, MP3, AAX, AAX+, AIFF, WAV ஆகிய பார்மட்டுகளை இயக்குகிறது. வீடியோ பிளேயரில் H.264, MP4, MOV ஆகிய பைல்களை இயக்கலாம். Threeaxis gyro, accelerometer, proximity sensor, ambient light sensor, digital compass ஆகியவை தரப்பட்டுள்ளன. பல தொழில் நுட்ப முன்னோடி வசதிகள் தரப்பட்டாலும், இத்துறையில் தற்போது கிடைத்து வரும் புதிய வசதிகள் சில இதில் தரப்படவில்லை. என்.எப்.சி. என அழைக்கப்படும் அண்மைத் தள தகவல் தொடர்பு வசதி இல்லை. இதனால், இந்த போனைப் பயன்படுத்தி, கடைகளில் பணம் செலுத்த முடியாது. ஆனால், ஆப்பிள் தன்னுடைய பாஸ்போர்ட் மொபைல் பேமென்ட் சாட்ப்வேர் புரோகிராமினை அளிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தற்போது வேகமாகப் பரவி வரும் வயர்லெஸ் சார்ஜ் வசதியும் இதில் தரப்படவில்லை. அண்மையில் வெளியான நோக்கியா லூமியா 920 விண்டோஸ் போன் 8, இந்த வசதியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.