ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் புதிய சாதனங்களைக் களமிறக்குவதற்கு முன்பகா கூகுள் தனது புதிய விலை குறைந்த லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய லேப்டாப்பை சாம்சங் நிறுவனத்தின் கூட்டணியோடு களமிறக்க இருக்கிறது. மேலும் எடை குறைந்த இந்த புதிய லேப்டாப்பை 249 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது கூகுள்.
இந்த புதிய லேப்டாப் கூகுளின் க்ரோம் வெப் ப்ரவுசரில் இயங்கும். மற்ற லேப்டாப்புகளைப் போல் இதில் ஹார்ட் ட்ரைவ் இருக்காது. மாறாக இந்த லேப்டாப் இணையதள உதவியுடன் இயங்கும். இந்த லேப்டாப்தான் மிகக் குறைந்த விலை லேப்டாப்பாக இருக்கும் என்று தெரிகிறது.
இதற்கு முன் சாம்சங் கூட்டணியில் கூகுள் சற்று உயர்தரமான லேப்டாப்பை களமிறக்கி இருந்தது. அந்த லேப்டாப் 449 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த புதிய குறைந்த விலை லேப்டாப் அமெரிக்காவில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெஸ்ட் பை ஸ்டோர்களில் அடுத்த வாரம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த லேப்டாப்பை வாங்க ப்ரீ ஆர்டரும் செய்யலாம்.
வரும் அக்டோபர் 26ல் மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த இயங்கு தளத்தை கணினிகள், லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகளில் பயன்படுத்தலாம். அதனால் இந்த புதிய இயங்கு தளத்தில் ஏராளமான சாதனங்கள் விற்பனைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் விலை 500 அமெரிக்க டாலர்களிலிருந்து 1000 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆப்பிள் தனது மினி ஐபேடை மிக விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த மினி ஐபேட் 249 அமெரிக்க டாலர்களிலிருந்து 299 அமெரிக்க டாலர்களுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே இந்த சூழலில் குறைந்த விலையில் தனது க்ரோம்புக் லேப்டாப்பைக் களமிறக்கினால் மிக விரைவில் லாபம் பார்த்துவிடலாம் என்று கூகுள் கணக்குப் போடுகிறது.
கருத்துரையிடுக