கணினி மென்பொருள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் ஒரு தயாரிப்புதான் கணினித் தொழில்நுட்பம் இணைந்த கண்ணாடியாகும். இதனை அணிந்துகொண்டால் ஒருவர் செய்யும் செயலினைத் துல்லியமாக வெளியிலிருந்து கவனிக்க முடியும். மருத்துவத்துறையில் முக்கியமான அறுவை சிகிச்சைகள் நடைபெறும்போது அறைக்கு வெளியே மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பின்மூலம் அவர்களுக்கு விளக்கம் அளிக்க முடியும்.
சென்னையில் முதன்முறையாக இத்தகைய கண்ணாடியை அணிந்துகொண்டு லைப்லைன் மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார் நேற்று இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்துள்ளார். 45 வயதுடைய ஒருவருக்கு மேல் இரைப்பை குடல் லேப்ராஸ்கோப்பியையும், 42 வயதுடைய பெண்ணிற்கு குடலிறக்க அறுவை சிகிச்சையினையும் அவர் நேற்று செய்தார். இந்த சிகிச்சைகள் அவருடைய மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.
காரோட்டும்போது பின்புறக் கண்ணாடி வழியே பார்ப்பது போலவே தான் உணர்ந்ததாக இவர் கூறுகின்றார். அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டே தன்னால் மாணவர்களிடமும் இந்த சிகிச்சை குறித்துப் பேச முடிந்தது என்றும் இவர் தெரிவித்தார். கூகுள் கண்ணாடி சாதாரணக் கண்ணாடியைப் போலவே அணியக்கூடிய விதத்தில் உள்ளது. இதன் தொழில்நுட்பம் குரல் கட்டளைகள் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வீடியோவாக உபயோகிப்பவரின் திரையில் காட்சிகள் வெளிவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை துறையில் இந்த முறை ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கும் என்று கருதும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை அறைக்குள் நடைபெறும் விஷயங்கள் குறித்து வெளியில் இருப்போர் அறிந்து கொள்ளுவதற்கு இது ஒரு நல்ல செயல்பாடாகும் என்று குறிப்பிட்டனர். இந்தக் கண்ணாடி இன்னும் விற்பனை சந்தைக்கு வெளிவரவில்லை என்றபோதும், இந்த வருட ஆரம்பத்தில் கூகுள் நிறுவனம் 2 ஆயிரம் கண்ணாடிகளை பரிசோதனை முயற்சியாக பொதுமக்களின் புழக்கத்தில் விட்டுள்ளது.
கருத்துரையிடுக