நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ம் ஆண்டு ஊட்டிமலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது.
ஆனால் மலைப்பகுதி மிகவும் கரடுமுரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், அதாவது 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
பாரம்பரியமிக்க இந்த ரயில் போக்குவரத்தை உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவிப்பதற்கான முயற்சிகளில் தென்னக ரயில்வே, டெல்லியில் உள்ள ரயில்வேஅருங்காட்சியகம் மற்றும் ரயில்வே வாரியம் ஆகியவை இறங்கின. யுனெஸ்கோவுக்கு ஊட்டி மலை ரயில் குறித்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டுசெப்டம்பர் மாதம் சிட்னியைச் சேர்ந்த பேராசிரியர் ராபர்ட் லீ என்பவரது தலைமையிலான யுனெஸ்கோ குழு ஊட்டிக்கு வந்துமலை ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தது. மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையில் உள்ள ரயில் பாதை, ரயில் நிலைய கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்டவற்றைஆய்வு செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஊட்டி மலை ரயிலுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தை வழங்கலாம் என்றுயுனெஸ்கோவுக்கு லீ தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக தற்போதுஅறிவித்துள்ளது.
உலகின் மிகச் சிறந்த ரயில் போக்குவரத்தாக நீலகிரி மலை ரயில் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் தனித்துவத்துடன் நீலகிரி மலை ரயில் விளங்குகிறது. ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள்,ரயில் நிலையங்கள் என அனைத்துமே மிக சிறப்பாகவும், தனித்துவத்துடனும் உள்ளன. எனவே இந்த ரயிலுக்கு உலக பாரம்பரியச் சின்னம் என்ற அந்தஸ்தைத் தருவது மிகப் பொருத்தமானது என்று யுனெஸ்கோஅமைப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, ஊட்டி மலை ரயிலைப் போலவே இயங்கி வரும் டார்ஜீலிங் மலை ரயிலும் உலக பாரம்பரியச் சின்னம் என்றஅந்தஸ்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் பாரம்பரியச் சின்னமாக ஊட்டி மலை ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை மேலும் அதிகரித்து இப்பிரதேசம் பொருளாதார ரீதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
நூறு வருடங்களை தாண்டியது; யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.
ஊட்டிக்கு பயணம் செய்தால் இந்த மலை ரயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஊட்டிக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் இந்த ரயிலில் புறப்படுவது மட்டுமே நிச்சயமான விஷயம்; போய்ச் சேர்வது என்பது நிச்சயமில்லாத விஷயம். எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடும் என்பதாகவே செய்திகள் இன்றுவரை வந்துகொண்டு இருக்கின்றன.
இருந்தாலும் இந்த ரயில் பயண அனுபவத்தை தவறவிட விருப்பமில்லாமல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பயணிக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் நானும் கடந்த வாரம் இடம் பெற்றேன். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்வது என்பது 5 மணி நேரம் என்றாலும் அது 6 மணி நேரமாகிவிடும். ஆகவே வரும்போது 4 மணி நேர பயணம்தான், அதனால் வரும்போது முயற்சி செய்யுங்கள் என்று பஸ்சில் ஏற்றி நண்பர் அனுப்பிவிட்டார். உண்மையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு போவதற்கான டிக்கெட் எடுக்கமுடியவில்லை என்பதுதான் காரணம்.
சாதரணமாக பொருட்காட்சியில் ஒரு நிமிடத்தில் சுற்றிவரும் குழந்தைகள் ரயிலுக்கே 20 ரூபாய் டிக்கெட் கட்டணம் வாங்கும் இந்த காலத்தில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சுமார் 4 மணிநேரம் பயணிக்க வாங்கும் கட்டணம் வெறும் 8 ரூபாய்தான். இதனால் சுற்றுலா நோக்கத்தில் பயணம் செய்பவர்களுடன் அன்றாடம் பஸ்சில் போய் வந்து கொண்டு இருந்தவர்கள் கூட, பஸ்டிக்கெட் கட்டண உயர்வு காரணமாக இந்த ரயிலுக்கு மாறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏகப்பட்ட சங்கடங்கள். இது ஒரு சிறப்பு ரயில் இதில் பயணம் செய்வதை வாழ்க்கையில் லட்சியமாகக் கொண்ட பலர் வருகின்றனர். டிக்கெட்டிற்கு நூறு ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே இதனை கருத்தில் கொண்டு ஏதாவது உடனே செய்தாக வேண்டும்.
12 பேர் உட்காரும் இடத்தில் 20 பேர் ஏறிக்கொள்ள ரயில் 2 மணிக்கு புறப்பட்டது. உட்காரவும், நிற்கவும் சிரமமானதால் பயணம் இனிமையாகத் துவங்கவில்லை. ஊட்டியில் லவ்டேல், கேத்தி, அருவங்காடு, வெலிங்டன் வழியாக குன்னூர் வரை டீசல் என்ஜினில் இயங்குவதால் ரயில் சராசரி ரயில் போல வந்து சேர்ந்தது. நெரிசலில் சிக்கி சிரமப்பட்டது போதும் இறங்கி பஸ்சில் போய்விடுவோம் என்று முடிவு எடுப்பதற்குள், என்னைவிட சீக்கிரமாக முடிவெடுத்தவர்கள் பலர் இறங்கி கிடு,கிடுவென இறங்கிவிட, இப்போது உட்கார இடம் கிடைத்தது, சரி இன்னும் கொஞ்சம் போய்த்தான் பார்ப்போமே என்று மனசு சொன்னது.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி என்ஜின் என்பதால் அதனை மாட்டுவதற்காக குன்னூரில் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்கள். இந்த நேரத்தில் நிலையத்தில் விற்ற " பர்கர், ஸ்வீட் பன் தான் மதிய உணவு. இங்கே கொஞ்சம் நல்ல உணவு கிடைக்க வழிகாணலாம். குன்னூரில் ஒரு பெட்டி கழட்டிவிடப்பட மீதம் உள்ள மூன்று பெட்டிகளுடன் குன்னூரில் இருந்து கிளம்பிய ரயில் திக்கி, திணறி காட்டேரி, ரன்னிமேடு வழியாக ஹில்குரோவ் வருவதற்குள் ரொம்பவே சலித்துக்கொண்டது. அதனை சமாதானப்படுத்த நிறைய தண்ணீர் பிடித்தார்கள்.
"ரயில் புறப்பட நிறைய சமயம் உண்டு' என மலையாளம் கலந்த தமிழில் பேசியதை அடுத்து, அவர் காலையில் போட்டிருந்த மசாலா வடையையும், டீயையும் வாங்க கூட்டம் ஆளாய் பறந்தது. "ஒன்னும் அவசரம் வேண்டாம் டிரெய்ன் கிளம்பினாலும் "நடந்து' போய் ஏறிக்கொள்ளலாம்; மெதுவா டீ சாப்பிடணும்' எனும்போதே இனி ரயில் எடுக்கும் வேகம் புரிந்து போனது. பெரிதாக பெருமூச்சு விட்டபடி கிளம்பிய ரயில் நிறைய மலைக்குகைகள், பாலங்கள், வளைவுகள் வழியாக அட்டர்லி, கல்லார் வழியாக மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.
மலைக் குகைக்குள் புகுந்து வரும்போது ரயிலினுள் வெளிச்சத்திற்கு விளக்கு போடுகிறார்கள். அந்த பல்பு கூட நூறாண்டுகள் ஆனது போலும்; மங்கிய நிலையில் எரிகிறது. அதிகாரிகள் நினைத்தால் களையக்கூடிய சின்னச் சின்ன குறைகள் இருக்கின்றன. ஆனாலும் ஊட்டி மலை ரயில் அனுபவம் என்பது அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டிய பயணமாகும்.
கருத்துரையிடுக