"பல ஆயிரம் மடங்கு செலவு குறையும்" ஏணியில் ஏறி வானத்துக்குப் போக முடியுமா? இந்தக் கேள்வி இப்போது வியப்பாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் நீண்ட காலத்துக்கு இந்தக் கேள்வி வியப்பை ஏற்படுத்தப் போவதில்லை. காரணம், உண்மையிலேயே வானத்துக்கு ஏணி அமைப்பது சாத்தியம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் தர்க்க ரீதியில் நிரூபித்திருக்கிறார்கள்.இப்போதைய அறிவியல் உலகில், விண்ணுக்கு ஒரு செயற்கைக் கோளைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், அதைத் தாங்கிச் செல்வதற்கு ஒரு வாகனம் அவசியம். அதுதான் ராக்கெட். மனிதர்கள் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கும் இந்த ராக்கெட்டுகள் தேவைப்படுகின்றன. ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ஆகும் செலவுதான் பல நாடுகளுக்குப் பிரச்னையாக இருக்கிறது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முன்வைக்கப்பட்ட யோசனைதான், ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR). அதாவது விண்தூக்கி. சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky)-யின் மூளையில் உதித்த யோசனை இது. பாரிஸ் நகரத்து ஈபிள் கோபுரத்தால் கவரப்பட்ட கான்ஸ்டாண்டின் ட்சியோல்கோவ்ஸ்கி (Konstantin Tsiolkovsky), இதே கோபுரத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்தினால் வானத்துக்கு ஏணி அமைத்துவிட முடியும் என்று நம்பினார். அவர் முயற்சி செய்த உயரம் 35 ஆயிரத்து 786 கிலோமீட்டர். அதாவது பூமியின் தரைப் பகுதியில் இருந்து புவிநிலைச் சுற்றுப்பாதை அமைந்திருக்கும் உயரம். இந்த உயரத்தில் செயற்கைக் கோள்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அவரது திட்டம்.இந்தத் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று வந்திருக்கிறது. ஆனாலும், விண்தூக்கியை அமைப்பதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட காலமாகச் சிக்கல் இருந்து வந்தது. 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஒரு கோபுர வடிவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று விஞ்ஞானிகள் சோர்ந்திருந்த நேரத்தில்தான், கார்பன் நேனோ ட்யூப் என்று கூறப்படும் அதிசயப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் உதவியுடன் எவ்வளவு நீளத்துக்கும் இணைப்பை ஏற்படுத்த முடியும்.
தற்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இண்டர்நேஷனல் ஸ்பேஸ் எலவேட்டர் கன்சார்ட்டியம் (International Space Elevator Consortium) என்ற சர்வதேச விண்தூக்கி அமைப்பு செயல்பட்டு வருகிறது. கார்பன் நானோ ட்யூப் மூலம் 1 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்க முடியும் என்று இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இதனால், நிலவுக்கும், செவ்வாய்க்கும் கூட லிஃப்ட் அமைப்பது சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது. குறைந்த செலவில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு, செலவில்லாத செல்போன் சேவை போன்றவையும் ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR)-ன் பயன்கள். விண்வெளிக்கு சாமான்யர்கள் செல்வதும் சாத்தியமாகும்.
தற்போதைய நிலையில் விண்ணுக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் 8 சதவீதம் தோல்வியடைகின்றன. ஸ்பேஸ் எலவேட்டர் (SPACE ELEVATOR) அமைக்கப்பட்டால், இந்தத் தோல்வியே இருக்காது.
நன்றி:புதியதளைமுறை
கருத்துரையிடுக