பெங்களூர்: பெங்களூரில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர்
பரிதாபமாக இறந்தனர். பெங்களூர் ஆடுகோடி பகுதியிலுள்ள ஜெய்கிருஷ்ணா
காம்பவுண்டில், பத்மாவதி கல்விக் குழுமத்துக்கு சொந்தமான 2 அடுக்குமாடி
குடியிருப்பு உள்ளன. இரண்டு தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில் முதல்
தளத்தில் 3 குடும்பங்களும், தரை தளத்தில் 4 குடும்பங்கள் வசிக்கின்றன. கூலி
தொழிலாளிகள், சில்லரை வியாபாரிகள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். நேற்று
காலை கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது,
தரை தளத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சற்று
நேரத்தில் முதல் தளத்தில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் கட்டிட
இடிபாடுகளில் சிக்கி தரைத்தளத்தில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேர்
பரிதாபமாக இறந்தனர். மேலும், 6 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கித்
தவித்துக் கொண்டிருந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து
வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் செயின்ட்
ஜான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் பிரேத
பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி
மேயர் சத்திய நாராயணா, சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர்,
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ^1 லட்சம் நிவாரண நிதியுதவி
வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், உத்தர
பிரதேசத்தை சேர்ந்த போலாசிங் (22), அவரது சகோதரர் மல்கான் சிங் (20),
தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்- சுஜாதா தம்பதியினரின் 2 வயது குழந்தை சவிதா,
பத்மா (40), மஞ்சம்மா (45) ஆகியோர், விபத்தில் சிக்கி உயிரிழந்தது
தெரியவந்தது. ராஜ்பீர் சிங் என்பவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று
வருகிறார். மேலும், 5 பேர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.
விபத்துள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சரிவர பராமரிக்காததால் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.
கருத்துரையிடுக