சென்னை: லெகர் புயல் தீவிரம் அடைந்து வருவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான லெகர் புயல் நேற்று மேலும் தீவிரம் அடைந்து மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது அந்த புயல் மசூலிப்பட்டினம், காக்கிநாடாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 900 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு 800 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது நாளை காலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது கடும் புயலாக கடக்கும் என்பதால் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, பாய்லின், ஹெலன் என்ற இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளன. இந்நிலையில், 3வது முறையாக லெகர் புயல் தாக்க உள்ளது. இதையடுத்து ஆந்திராவில் கடலோரப் பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் கரை கடக்கும் போது கிருஷ்ணா, கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 160 கி.மீ வேகம் முதல் 200 கிமீ வேகத்துடன் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த விரவும் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், குண்டூர் மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும். கடலில் 75 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன் சீற்றம் அதிகமாக காணப்படும்.
சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் 5 மற்றும் 6 ஏற்றப்பட்டுள்ளன. நாளை காலை புயல் கரை கடக்கும் போது வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துரையிடுக