இந்த வார வரலாறு:குஜாராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி(Narendra Modi)

குஜாராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி

பிறந்தநாள் : செப்டம்பர் 17, 1950

பிறந்த இடம் : வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: அரசியல்

நாட்டுரிமை: இந்தியன்

நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.
கல்வி 

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். 

தன்னுடைய எட்டு வயதிலேயெ, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 

இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

குடும்ப வாழ்கை 

மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லை இவர் வீடு. யாரும் இவர் வீட்டிற்கு வரமாட்டார்கள். இவரும் குறிப்பிட்ட ஒரு சிலரைத் தவிர வேறு யாரையும் தன் வீட்டிற்கு அனுமதிப்பதில்லை. 

அரசாங்கம் இவருக்கு கொடுத்த பங்களாவில் ஒரு சமையல்காரர், இரண்டு சிப்பந்திகள் அவ்வளவுதான்.

 ஒரு அரசாங்க பிரதிநிதியின் வீடு அது என்றால் அனைவரும் ஆச்சர்யப்படுவார்கள். சமையல்காரர் வரவில்லை என்றால் சிப்பந்தி ஒருவரே சமையல் வேலையை பார்த்துக்கொள்வார். 

திருமணம் செய்துகொள்ளவில்லை (பால்ய விவாகம் நடந்ததாக எதிர் கட்சியினர் விமர்சனம் செய்கின்றனர்). 

குடும்பத்தினரையும் கூட சேர்த்துக்கொள்ளவில்லை. 95 வயதான தாய் தன்னுடைய மூத்த சகோதரரின் வீட்டில் தங்கியிருக்கிறார். 

மூத்த சகோதரர் அரசு சுகாதாரத் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 

இரண்டாவது சகோதரர் நகரத்தின் ஒரு பகுதியில் நியாயவிலைக் கடை வைத்திருக்கிறார். 

மூன்றாவது சகோதரர் அரசாங்க பணியில் குமாஸ்தாவாக பணிபுரிகிறார். 

பலபேருக்கு இந்த குமாஸ்தாவின் அண்ணன்தான் மாநிலத்தின் முதல்வர் என்று தெரியாது.

 முதல் அமைச்சருடன் அவருடைய மூன்று சகோதர்களையோ அல்லது இரண்டு சகோதரிகளையோ யாரும் பார்த்ததில்லை.

அரசியல் வாழ்க்கை

சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். 

இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. 

மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-இன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு ‘குஜராத்’ மற்றும் ‘இமாசலப் பிரதேச’ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், ‘இமாசலப் பிரதேசம்’, ‘பஞ்சாப்’, ‘ஹரியானா’, ‘சண்டிகர்’, மற்றும் ‘ஜம்மு காஷ்மீர்’ போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 

1998 ஆம் ஆண்டு ‘அடல் பிகாரி வாஜ்பாய்’ பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.

குஜராத் முதல்வராக மோடி

தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். 

பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். 

இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

 பின்னர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். 

இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார்.

மோடி பணிகள் 

தினமும் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்துவிடுவார். 

ஒரு மணி நேரம் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். 

பின்னர் ஈமெயில்களை பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். 

இணையத்தில் குறிப்பாக கூகுள் அலர்ட்ஸை பார்வையிடுவார். 

அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும். 

காலை சுமார் 7:30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்துவிடுவார்.

 இவருக்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு. 

அரசுப் பணியை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.பம்பரம் போல் வேலை செய்வார்

15 நிமிடங்களுக்கு அதிகமாக நான் ஓய்வெடுத்ததில்லை என்று அவரே ஒரு கூட்டத்தில் உரையாடும் போது தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய அலுவல் முடிந்து தூங்கச்செல்லும்போது நள்ளிரவாகிவிடும். 

அவர் சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரம்தான் தூங்குவார்.

டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை நிருபர் இவரை பேட்டி எடுக்க மூன்று நாட்கள் இவருடன் தங்கியிருந்தார். அந்த மூன்று நாட்களில் இவருடைய வேலை பளுவை பார்த்த அந்த நிருபர் அசந்தே போய்விட்டார். 

இப்படி வேலை செய்ய தங்களால் எப்படி முடிகிறது? என்று அந்த நிருபர் கேட்க, அதற்கு அவர் “சரணாகதி. நான் செய்யும் பணிக்கு என்னை முழுமையாக அர்பணித்துவிட்டேன் அதனால் அந்த பணி எனக்கு பளுவாகத் தெரியவில்லை’ என்று பதிலளித்தார்.

மோடியின் குணம் 

 அபார நியாபக சக்தி. 

எந்த வேலையை யாரிடம் கொடுத்தால் வேலை வெற்றிகரமாக முடியும் என்று நன்கு அறிந்தவர். 

ஒரு பிரச்சனையின் முழு பரிமாணத்தை தெரிந்துகொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார். 

ஒரு பிரச்சனையை நன்கு புரிந்து கொண்டாலே அதை பாதி சரி செய்தமாதிரி என்று அடிக்கடி கூறுவார். 

தற்காலிகமான தீர்வெல்லாம் அவருக்கு பிடிக்காது. 

முழு தீர்வுதான் அவரைப் பொருத்தவரை சரியான தீர்வு. 

ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எப்பேற்பட்டாவது முடிக்காமல் ஓயமாட்டார். 

பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்தாயிற்றே, இனிமேல் நமக்கென்ன என்று சும்மா இருந்துவிடமாட்டார்.

 பொறுப்பை ஒப்படைத்தவரிடம் விசாரிப்பார். மேற்பார்வை இடுவார். 

யாரிடமிருந்து நல்ல யோசனை வந்தாலும் அதை எடுத்துக்கொள்வார். 

மற்றவர்களின் யோசனைகளை காது கொடுத்து கேட்பார்.

 மேலாண்மை நிர்வாகத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்று ஐஐM ல் பாட வகுப்புக்குச் செல்வார். கூடவே தன்னுடைய மந்திரி பிராதினிகளையும் கூட்டிச் செல்வார். 

அவருக்கு எதிலும் தாமதம் பிடிக்காது. 

வேலையை செய்வது மட்டுமல்லாது அதை சரியாக செய்தாகவேண்டும். 

தான் இட்ட பணி சரியாக நடைபெறவில்லை என்றால் பொறுமை இழந்துவிடுவார். 


முதல்வராக மோடியின் சாதனைகள்

பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். 

இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். 

மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். 

மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

விருதுகளும், மரியாதைகளும்

2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.

2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.

நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். 

மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.

மோடியின் வாழ்கை குறிப்புக்கள் :


நரேந்திர மோடி: புதிய இரும்பு மனிதர் 

நரேந்திர மோடி: வாழ்வும் அரசியலும்

மேலும் ,ஹாலிவுட்டில்  நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் தயார் செய்து வருகின்றனர் இதில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

ஹாலிவுட்டில் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம் பற்றி சிறு குறிப்பு.

அமெரிக்காவில் வாழும் குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவுள்ளார். இதற்காக அவர் முறைப்படி மோடியிடம் அனுமதியும் பெற்றுவிட்டார். 

நரேந்திரமோடி கேரக்டரில் விவேக் ஓபராய் நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

சாதாரண டீக்கடை நடத்திவந்த நரேந்திரமோடி குஜராத்தின் முதல்வராகி, தற்போது இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் உள்ள மோடியின் கதையை திரைப்படமாக எடுக்க அமெரிக்காவில் வசிக்கும் குஜராத் இயக்குனர் மிதேஷ் பட்டேல் முடிவு செய்துள்ளார். 

இதற்கு அனுமதி கொடுத்துள்ள மோடி, தனது வாழ்வில் நடந்த பல திருப்புமுனை சம்பவங்களையும் அவரோடு பகிர்ந்துள்ளாராம்.  இந்த படத்திற்கு "Tea master to Prime Minsiter" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் உருவாகும் இந்த படத்தில் நரேந்திரமோடியாக நடிக்க விவேக் ஓபராய் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்த படம் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. 

ஆங்கிலத்தில் தயாராகும் இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது

தினமும் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்துவிடுவார். ஒரு மணி நேரம் யோகா செய்வதற்கு ஒதுக்கிவிடுவார். பின்னர் ஈமெயில்களை பார்வையிட்டு அலசத் தொடங்கிவிடுவார். இணையத்தில் குறிப்பாக கூகுள் அலர்ட்ஸை பார்வையிடுவார். அன்றைய தினசரிகள் அனைத்தும் முதல்வரின் வீட்டிற்கு காலையில் வந்துவிடும். காலை சுமார் 7:30 மணிக்கு முதல்வர் தன்னுடைய அலுவல் பணிகளை ஆரம்பித்துவிடுவார். இவருக்கு கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மீது அலாதி ஈடுபாடு. அரசுப் பணியை மேம்படுத்துவதற்காக அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.பம்பரம் போல் வேலை செய்வார்.