சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும், தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும், தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்
மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.
நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.
கருத்துரையிடுக