இட்லி
கொரோனாவுல மட்டுமில்லைங்க.. இதுலயும் நாலு ஸ்டேஜ் இருக்கு.
இப்போ உங்க வீட்ல என்ன ஸ்டேஜ் நடக்குது?
சென்னை: கொரோனா தாக்கம் இந்தியாவில் எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்ற குழப்பமே இன்னும் தீராத நிலையில், வீடுகள் எந்த ஸ்டேஜில் உள்ளது என்ற வேடிக்கையான சமூகவலைதளப் பதிவு ஒன்று வைரலாகியுள்ளது. கொரோனோ பரவலில் மொத்தம் நான்கு நிலை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதில் மூன்றாவது கட்டத்திற்கு இந்தியா சென்று விடக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வீட்டுச் சாப்பாடு சரியில்லை என ஹோட்டலுக்கு படையெடுத்தவர்கள் கூட, இன்று வேறு வழியில்லாமல் வாயை மூடிக் கொண்டு போடுவதை சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இட்லி மாவை வைத்து வேடிக்கையான ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளார் நெட்டிசன் ஒருவர். சமூகவலைதளத்தில் பார்த்த அந்தப் பதிவு ரசிக்கும்படி இருக்கவே, இதோ உங்களிடமும் அதை பகிர்ந்து கொள்கிறோம்.
இட்லி மாவிலும் அதாகப்பட்டது, இட்லி மாவிலும் நான்கு ஸ்டேஜ்கள் இருக்கிறாதாம்.
மாவு அரைத்த மறுநாள் கெட்டியான மாவில் இட்லி ஊற்றுவோமே அது முதல் ஸ்டேஜ்.
பின் அடுத்த நாள், அந்த மாவில் சற்று நீர் ஊற்றி தோசையாக வார்ப்பது இரண்டாவது ஸ்டேஜ்.
3வது ஸ்டேஜ் மூன்றாவது நாள் சற்று புளிக்க ஆரம்பித்த மாவில், லேசாக ரவை கலந்து பனியாரமாக ஊற்றுவது மூன்றாவது ஸ்டேஜ்.
இந்த ஸ்டேஜிலேயே மாவு தீர்த்து விட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அப்படி இல்லாமல், இன்னமும் மாவு இருந்தால் அவர்கள் நிலை பாவம் தான்.
மோசமான நிலை மிகவும் புளித்துப் போன அந்த மாவில் வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, தோசை வார்த்துச் சாப்பிடுவது தான் நான்காவது ஸ்டேஜ்.
முந்தைய மூன்று நிலைகளில் கூட மாவின் ருசி மாறாமல் சாப்பிட நன்றாகத் தான் இருக்கும். இந்த நான்காவது நிலை தான் மோசம் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
கொடுமையிலும் கொடுமை வாயிலேயே வைக்க முடியாத அளவிற்கு புளித்துப் போன மாவில் தோசை சாப்பிடுவது கொடுமையிலும் கொடுமை. எனவே குடும்பத் தலைவிகளே உங்கள் வீடுகளில் மிச்சமிருக்கும் மாவு மூன்றாவது நிலையைக் கடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இது போன்ற புலம்பல்கள் அதிகமாகி விடும்.
கருத்துரையிடுக