காளானால் கனத்த இதயம்..!
வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து Software Engineer ஆக பணிபுரியும் கார்த்திக், வேலையே முடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில் மாலை நேரம் மறைந்து சற்றே இருள் சூழ்ந்த நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கினான். வரும் வழியில் சற்று பசிக்கவே, ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று நினைத்து கடைத் தேடினான். சற்று தொலைவில், சிறு கூட்டம் சூழ்ந்து, சிறு விளக்கு ஒன்று மிளிர, ஒரு சிறு வண்டி கடையை ஒன்று இருந்ததைக் கண்டான்.
சற்று அருகில் சென்று பார்த்தான். அது ஒரு தள்ளு வண்டி கடை. அங்கு சிலர் தங்களுடைய ஆர்டர்களை தெரிவித்துவிட்டு காத்திருந்தனர். கார்த்திக் சற்றே பார்த்தவண்ணம், “அண்ணா, எனக்கு காளான் ஒரு ப்ளேட்” என்று கூறிவிட்டு வேடிக்கை பார்கத்துவங்கினான். அங்கு மாட்டபட்டிருந்த பலகையில், விலைப்பட்டியல் எழுதப்பட்டிருந்தது. கார்த்திக்கின் கண் பார்வை அதையும் கடந்து சென்றது.
சற்று நேரத்தில் “சார், காளான் ரெடி” என்று குரல் கேட்டது. கார்த்திக் உடனே அதை பெற்று கொண்டான். சற்று மெதுவாக ஊதி விட்டு, சாப்பிட ஆரம்பித்தான். அங்கு காளான் விற்பவரின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர்களுக்குள் சிறு உரையாடல். கார்த்திக் அதை கேட்டுகொண்டிருந்தான்.
“என்னப்பா, ராஜவேலு. எப்படி இருக்க. இன்னிக்கி என்ன லேட்டா கடைய போட்டிருக்க?” என்றான் நண்பர்.
“ஆமப்பா. கொஞ்சம் உடம்பு முடியல. அதனாலதாம்பா.” என்றான் சற்று தோய்ந்த குரலுடன் காளான் கடைக்காரன்.
நண்பர், “அப்டின்னா கடைய மூடிட்டு, இனிக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுக்கவேண்டியதுதானே”.
காளான் கடைக்காரன் “பெருசாலாம் ஒன்னு இல்லப்பா. அதுவும் இல்லாம, லீவ் எடுத்துட்டா யாவாரம் நிக்காதுப்பா. அதாம்ப்பா லேட் ஆனாலும் கடைய கொஞ்ச நேரத்துக்கு போடலாமுன்னு வந்துட்டேன்”.
இதைகேட்டுகொண்டிருந்த கார்த்தி தன மனதில் “பாவம் இவர். தினசரி உழைத்தால்தான் வண்டி ஓடும் போல இருக்கு. காளான் 25 ரூவாய், மசாலா சுண்டல் 20 ரூவாய், பாணி பூரி 20 ரூவாய். ம்ம் இத வச்சிட்டு எப்படிதான் இந்த சென்னைல இருக்காரோ” என்று நினைத்துக்கொண்டே தன் நிலைய சற்று பெருமையாக எண்ணிகொண்டான்.
சற்று நேரத்தில் அவர் நண்பர் அங்கிருந்து நகர்ந்தார். கார்த்திக் காளானை சாப்பிடும்போதே “அண்ணா கார்ன் கொஞ்சம் போடுங்க னா” என்று கேட்டு வாங்கி சாப்பிடுவதை தொடர்ந்தான்.
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டு தட்டை நிறைய தட்டுகள் குமிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு கையை கழுவிவிட்டு, தண்ணீர் குடித்தான். தன் பர்சில் உள்ள 100 ரூபாயை எடுத்து நீட்டினான். காளான் கடைக்காரரும் அதை வாங்கிகொண்டு கல்லாவை திறந்து நோட்டுக்களை அள்ளினார். அதில் சில நோட்டுக்களை எடுத்து மற்றும் சில்லறையையும் சேர்த்து திருப்பிக்கொடுத்தார்.
அதைப்பார்த்த கார்த்தி, “நிறைய சில்லறை வைத்திருப்பார் போல” என எண்ணிக்கொண்டே, “தேங்க்ஸ் னா” என்றான்.
கார்த்தி “அண்ணா எவ்ளோ நேரம்னா கடை இருக்கும்” என்று எதேச்சையாக வினவினான்.
கடைக்காரர் “இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் ப்பா. இன்னிக்கி கொஞ்சம் டல் தாம்பா. மொத்தமே ரெண்டு மணி நேரம்தான் போட்டிருக்கேன்” என்று கூறிக்கொண்டே தன்னிடம் வந்த ஆர்டருக்கானவற்றை செய்துகொண்டிருந்தார்.
கடைக்காரர் “நான் வழக்கமா நாலு மணிநேரம் கடைய போடுவேன். இனிக்கி வெறும் ரெண்டு மணி நேரம் தாம்பா. வெறும் அம்பது பேரு யாவாரம் தாம்பா ஓடும்” என்று வேகமாக வேலை செய்துகொண்டே.
இதை கேட்ட கார்த்திக்குக்கு சற்று “திக் திக்” என்று இருந்தது. சற்றே அவனின் கணக்கை துவங்கினான் தன மனதில்.
“இன்று ஐம்பது பேர் என்றால், ஒருத்தன் கிட்ட 20 ரூபாய் யாவாரம்னு வச்சிகிட்டா, 50 இண்ட்டு 20 இஸ் ஈகோல்ட்டு 1000.” சற்றே வியந்தான்.
“அப்டின்னா 100 பேருன்னா ரெண்டாயிரம். ஒரு மாசத்துக்கு முப்பது நாள் போட்டா, அறுபதாயிரமா” என்று அசந்து போனான்.
இருந்தாலும் அதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்து கடைக்காரரிடம் சாதரணமாக கேட்டான். அவரும் “சர்வ சாதாரணமாக ஆமப்பா, எப்படியும் அறுபது வந்திடும்ப்பா” என்றார்.
கடைக்காரர் “சென்னைல நாப்பதுக்கு குரைஞ்சி சம்பாதிச்சா சமாளிக்க மிடியுமாபா.” என்று கூறிவிட்டு அடுத்த ஆர்டரை வாங்கிவிட்டு “சார் காளான், சுண்டல் ரெடி” என்று உரைத்தார்.
கார்த்திக் சற்று கலக்கத்துடன் “நாமளும்தான் மாங்கு மாங்குன்னு இன்ஜினியரிங் படிச்சோம். வேலைக்கு வந்து 3 வருஷம் ஆச்சி. வெறும் முப்பதாயிரம் தான் வாங்குறோம். அவர் என்னடானா 40 இருந்தான் வாழலாம்னு சொல்றாரு. மாசா மாசம் சிக்ஸ்டி தௌசண்ட் டேக் ஓவர் ஆஹ். அதுவும் ஒரு நாளைக்கு வெறும் நாலு மணிநேரம் தான் வேலை. அவருக்கு யாரும் முதலாளி இல்ல, அவரே முதலாளி. முக்கியமா அவரு நினைக்குக்போது லீவ் எடுத்துப்பாரு. டாக்ஸ் தொல்லையே இல்ல..ம்ம் மனுஷன் வாழ்றாரு. பேசாம நாமளும் காளான் சுண்டல் கடைய போற்றலாம்போல” என்று கனத்த இதயத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் கார்த்திக்.
உங்களுக்கு இது போன்ற ஏதாவது அனுபவம் இருந்தால் அது யாரைப்பார்த்து “அவர்களை போல நாமளும் கடைய போடலாம் போல” என்று தோன்றியிருந்தால், அவரை பற்றிய உங்கள் அனுபவத்தை பின்னூட்டத்தில் இடுங்கள். இதை உங்கள் நண்பர்களுடன் பகிர நினைத்தால், Share பொத்தானை அழுத்தி பகிருங்கள்.
கருத்துரையிடுக