A+ A-

உண்மை பேசுவோம்..!

 உண்மை பேசுவோம் 



அது ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான். 

முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.

ஒரு நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.

அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.

காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.

தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.

ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.

அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.

மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.

ராமு அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.

பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.

நான் உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.

ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என  நம்ப மாட்டார்கள்.