பொது வெளியில் தோன்றிய அலிபாபா நிறுவனர் ஜாக் மா
அலிபாபா நிறுவனர் ஜாக் மா பல மாதங்களாக ‘காணாமல்’ போன பிறகு முதல் பொது வெளியில் தோன்றினார்..
- சீனாவைத் தளமாகக் கொண்ட முன்னணி இணைய வழி வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி செல்வந்தருமான ஜாக் மா கடந்த 3 மாதங்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று புதன்கிழமை முதல் முதலாக பொது வெளியில் தோன்றினார்.
- சீனாவில் கிராமப்புறங்களைச் சோ்ந்த 100 ஆசிரியர்களுடன் இன்று இணையவழி நேரலை கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.
- ஜாக் மா பொதுவெளியில் தோன்றியதை அடுத்து அவரது நிறுவனமான அலிபாபா பங்குகள் ஹொங்கொங் பங்குச் சந்தையில் இன்று 5 வீதம் உயர்ந்தன.
- சீன அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜாக் மா கடந்த அக்டோபர் மாதம் முதல் காணாமல் போயிருந்தார். இது குறித்து சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்வேறு சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பொது வெளியில் தோன்றியுள்ளார்.
- சீனாவில் இணையதளம் வர்த்தகம் மூலம் பெரு வெற்றிபெற்று அந்நாட்டில் முன்னணி செல்வந்தராக உருவான ஜாக் மா, தற்போது உலகம் முழுவதும் அலிபாபா நிறுவனத்தின் கிளைகளை பரப்பி வருகிறார்.
- இந்த வளர்ச்சியின் பின்னணியில் சீன அரசுக்கும் ஜாக் மாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில தடைகளை சீனா விதிப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜாக் மா கடந்த ஒக்டோபர் மாதம் வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
- இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து சீன அரசின் பல்வேறு தொல்லைகளுக்கு அலிபாபா நிறுவனமும், ஜாக் மாவும் ஆளானதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களாக ஜாக் மா பொதுநிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
- ஜாக் மா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை. ஜாக் மா இருப்பிடம் குறித்த தகவல்களும் வெளியாகாமல் இருந்தது.
- அவர் பொது வெளியில் வராத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் 3 மாதங்களின் பின்னர் அவா் இன்று பொது வெளியில் தலைகாட்டி தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
கருத்துரையிடுக