தானாக நகரும் கற்கள்
கற்கள் தானாய் நகர்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறது; இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி 'ரேஸ்டிராக் பிளாயா' (Racetrack Playa) எனப்படுகிறது. வறண்டு வெடிப்புற்ற களிமண் பிரதேசம் இது. விலங்குகளும், மனித நடமாட்டமும் இல்லாத இந்தப் பகுதியில்தான், கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்கின்றன. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது, புதிரான விஷயமாக இருந்தது. 13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்கின்றன.
ஜேம்ஸ் நோரிஸ் (James Norris) என்பவர், இந்த இடத்தில் தானியங்கிக் கேமராவைப் பொருத்தி ஆய்வு செய்தார். தனது ஆய்வின்போது, சுமார் 60 பாறைகள் தானாக நகர்வதைக் கண்டார். கற்பாறைகள் நகரும்போது, லேசான சத்தமும், அவை நகர்ந்த இடத்தில் தடயமும் தெரிந்தது. பாறைகளை நகர்த்தியது, நீரில் மிதக்கும் சிறிய பனிக்கட்டிகள்தான் என்று கண்டறிந்தார்.
வறண்ட நிலப்பரப்பில் தண்ணீர் எங்கிருந்து வந்தது? குளிர்ப்பிரதேசமான அந்தப் பகுதியில், மழை எப்போதாவதுதான் பெய்யும். குளிர்காலத்தில் மழை பெய்யும்போது, களிமண் பூமி என்பதால் 3 செ.மீ. அளவு மட்டுமே தண்ணீர் தேங்கும். அதிகக் குளிரில் தண்ணீர் பனிக்கட்டியாக மாறி, தேங்கிய நீரில் மிதக்கும். காற்று வீசும்போது பனிக்கட்டிகள் கற்பாறைகளின் மீது மோதி, அடிப்பகுதியில் உள்ள களிமண்ணை இளக்கிப் பாறைகளை நகரச் செய்கின்றன. இதனால், கற்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்கின்றன. தண்ணீர் ஆவியான பின்னர் பாறைகள் நகர்ந்ததன் தடயம் தெரியும். நகரும் கற்கள் (Sailing stones) பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கருத்துரையிடுக