A+ A-

வாழ்க்கை மாற்றும் செயல்கள் ..!

 வாழ்க்கை மாற்றும் செயல்கள் 

வாழ்க்கை மாற்றும் செயல்கள்

பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார்.

நீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு என்று கேட்டார். அதனை கேட்டு முகம் சுழித்த பிச்சைக்காரன், பார்ப்பதற்கு பெரிய பணக்காரன் போல் இருந்து கொண்டு பிச்சை போட்ட பணத்தை திரும்ப கேட்க்கிறீர்களே என்றான். நான் ஒன்றும் பணத்தை கேட்கவில்லையே, பணத்திற்கு பதிலாக நீ வைத்திருக்கும் பென்சில்களை கொடு என்று தானே கேட்டேன் என்றார்.

சிறுது நேரம் பேசி பார்த்த பிச்சைக்காரன் முனகிக்கொண்டே தான் வைத்திருந்த பென்சில்களை அந்த பணக்காரரிடம் கொடுத்தான். பென்சில்களை வாங்கிக்கொண்ட பணக்காரரும் பையில் வைத்து புகைவண்டியில் ஏறி புறப்பட்டார்.

பிச்சைக்காரனும் வழக்கம் போல் யாசகம் கேட்க ஆரம்பித்தான்.

சில மாதங்களுக்கு பிறகு பெரிய வியாபாரிகளுக்கான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பணக்காரர், தான் சண்டை போட்டு பென்சில் வாங்கிச்சென்ற பிச்சைக்காரன் கோட் சூட் போட்டு விருந்தில் பல பெரிய வியாபாரிகளுடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார்.

அவன் அருகில் சென்ற பணக்காரர் என்னப்பா… என்னை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார் ….

உடனே அந்த பிச்சைக்காரன், ஐயா உங்களை மறக்க முடியுமா? நான் வெகு நாட்களாக உங்களை தான் நான் நன்றி சொல்ல தேடிக்கொண்டிருதேன். என் வாழ்க்கையை மாற்றியது நீங்கள் தான், நான் இப்போது இந்த சமுதாயத்தில் மதிக்கப்படும் ஒருவனாக இருப்பதும் உங்களால் தான் என்றான்.

தலை சுற்றிப்போன பணக்காரர் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அழுக்கு துணியுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாய், இப்போது என்னை விட பெரிய பணக்காரர்களெல்லாம் உன்னிடம் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர். எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருக்கிறது, தயவு செய்து என்ன நடந்தது என்று சொல்லிவிடு என்று கேட்டார்.

அன்று என்னிடமிருந்து நீங்கள் வாங்கி சென்ற பென்சில்கள், என் மகளுக்காக நான் வாங்கி வைத்திருந்தது. இரவு நான் பிச்சை எடுத்து முடித்து, வீடு திரும்புவதற்குள் கடைகளெல்லாம் மூடிவிடும். அதனால் காலையில் வரும்போதே வாங்கி வந்து பையில் வைத்திருந்தேன். அதை தான் நீங்கள் வாங்கி சென்றீர்கள். நீங்கள் சென்றவுடன் உங்களை திட்டிக்கொண்டே வழக்கம் போல பிச்சை எடுக்க ஆரம்பித்தேன்.

இரவு வரை பிச்சை எடுத்துவிட்டு, வீடு திரும்பிய நான் நடந்தவற்றை என் மனைவியிடம் கூறி அந்த 10-ரூபாயை அவளிடம் கொடுத்து நாளை காலை நீயே கடைக்கு சென்று பென்சில் வாங்கி மகளிடம் கொடுத்துவிடு என்றேன். நான் சொன்னதைக்கேட்டு கண்ணீர் வடித்த என் மனைவி, இந்த 10- ரூபாய் தான் என் வாழ்நாளில் நான் மரியாதையுடன் சம்பாதித்த ஒரே பணம். தினமும் பிச்சை எடுத்த காசில் சாப்பிடுவதற்கே அசிங்கமாக இருக்கும், இன்று தான் என் வாழ்நாளில் என் கணவன் உழைத்து சம்பாதித்த பணத்தில் சாப்பிட போகிறேன் என்று கூறி மீண்டும் அழுதாள்.

எங்கிருந்தோ வந்த அந்த மனிதர் நீ வாழ ஒரு வழியை காண்பித்துவிட்டார், நாளை முதல் நீ பிச்சை எடுக்க கூடாது. இந்த 10-ரூபாய்க்கு மீண்டும் பென்சில் வாங்கிக்கொண்டு போய் ரயில் நிலையத்தில் விற்றுவிட்டு வா என்றாள்.

மறுநாள் சுத்தமாக குளித்துவிட்டு 10-ரூபாய்க்கு பென்சில் வாங்கிக்கொண்டு வந்து ரயில் நிலையத்தில் விற்க தொடங்கினேன். அன்று மாலைக்குள் 30- ரூபாய் லாபம் சம்பாதித்தேன். என்னுள் இருந்த வியாபாரியை உணர்ந்தேன். என் வாழ்க்கையில் இவ்வளவு நாட்களை பிச்சை எடுத்து வீணடித்துவிட்டேனே என்று மனம்நொந்துகொண்டேன். அன்று முதல் இரவு,பகல்,மழை, வெயில் எதுவும் பார்க்காமல் தினமும் தன்னம்பிக்கையுடன் வியாபாரம் செய்தேன். இன்று உங்கள் முன் இப்படி நிற்கிறேன் என்றான். உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டிருக்கிறேன் என்றான்.

திகைத்து போன அந்த பணக்காரர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்…..

நம் வாழ்க்கையிலும் பல நேரங்களில் இதுபோல தான் நம் திறமையை வெளிகொண்டு வரவே இன்னொருவர் தேவைப்படுகிறார்….


தன்னம்பிக்கை கதைகள்



பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்கா