மதிப்பு
பள்ளிக்கூடம் நடந்து கொண்டிருந்தது. ஐந்தாம் வகுப்பு ஆசிரியை பத்மாவதி கரும்பலகை போர்டில் சாக்பீசினால் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த பாலனும், பாபுவும் ஒருவருக்கொருவர் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று எழுந்து நின்று ஒருவருக்கொருவர் சிலேட்டால் அடித்துக் கொண்டார்கள்.”"டீச்சர்… டீச்சர்… இங்க பாருங்க. பாலனுக்கும், பாபுவுக்கும் சண்டை நடக்குது…” என்று மற்ற மாணவர்கள் கோரசாகக் குரல் கொடுத்தார்கள்.பிளாக் போர்டில் எழுதுவதை நிறுத்தி விட்டுத் திரும்பினார் பத்மாவதி. அவருக்கு கோபம் வந்து விட்டது. “”பாபு… பாலன்… இரண்டு பேரும் இங்க வாங்க…” இருவரும் பயந்து நடுங்கியவாறு டீச்சர் முன்னால் வந்து நின்றார்கள்.”
“உங்களுக்குள்ள என்ன சண்டை… உண்மையைச் சொல்லுங்…” “”டீச்சர்… டீச்சர்… எங்க அப்பா எனக்கு ஒரு புது பென்சில் வாங்கிக் கொடுத்தார். அதை எங்க அம்மா நல்லா சீவி கொடுத்தாங்க. அந்தப் பென்சிலை நான் பாலன்கிட்ட காட்டினேன். அவன் உடனே, “இது என்னோட பென்சில்’னு சொல்லிப் பிடுங்கிக்கிட்டான். நான் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கல. கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டு, சிலேட்டால என்னை அடிச்சான். நானும் திருப்பி அடிச்சேன்” என்றான் பாபு. அவன் கண்கள் கலங்கியிருந்தன.சிறிது நேரம் யோசித்த பத்மாவதி டீச்சர், “”நீ என்னப்பா சொல்றே…” என்று பாலனைப் பார்த்துக் கேட்டார். “”டீச்சர்… பாபு சொல்றது அத்தனையும் பொய். இந்தப் பென்சிலை எனக்கு எங்க அப்பாதான் வாங்கிக் கொடுத்தாரு. அவரே பிளேடால சீவியும் கொடுத்தாரு. நான் பாபுகிட்ட புது பென்சிலைக் காட்டினேன். உடனே அவன், “இது என்னோட பென்சில். என்கிட்டே கொடுத்திடுன்னு சண்டை போட ஆரம்பிச்சுட்டான்…” -எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மீண்டு பாபுவை குரூரமாகப் பார்த்தான் பாலன்.
மீண்டும் சிந்தனையில் மூழ்கினார் டீச்சர். “”சரி… அந்தப் பென்சிலை என்கிட்டே கொடுங்க…” பாலன் பென்சிலை டீச்சர் பத்மாவதியிடம் கொடுத்தான். “”சரி… பாலன் நீ முன் வரிசையில் உட்காரு. பாபு நீ கடைசி வரிசையில் போய் உட்காரு. பென்சில் யாருடையதுன்னு நான் கண்டுபிடிக்கிறேன். அதுவரைக்கும் ரெண்டு பேரும் அமைதியா இருக்கணும். நான் சொல்றதைக் கேட்கலேன்னா அடி விழும். புரியுதா..?” தொடர்ந்து பத்மாவதி டீச்சர் பிளாக் போர்டில் எழுதி முடித்தார். “”எல்லோரும் கவனியுங்க. பிளாக் போர்டிலே ரெண்டு கணக்கு எழுதியிருக்கேன். அதை அப்படியே உங்க சிலேட்டிலே எழுதி அதற்கான விடையையும் தெளிவா எழுதணும்…” என்று சொல்லிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தார் டீச்சர்.
மாணவர்கள் எழுதத் துவங்கினர். பத்மாவதி டீச்சர் வருகைப் பதிவேட்டை சரிபார்த்து வைத்தார். பின்னர், மாணவர்கள் எழுதுவதை கவனித்துக் கொண்டிருந்தார். அரைமணி நேரத்தில் எல்லா மாணவர்களும் எழுதி முடித்து விட்டனர்.”"சரி… எல்லோரும் தங்களுடைய சிலேட்டை இங்கே என்னோட மேஜையில் கொண்டு வந்து வையுங்கள். நான் பார்த்துவிட்டு மார்க் போடுறேன்” என்றார் டீச்சர். மாணவர்கள் வரிசையாக எல்லோரும் வந்து டீச்சரின் மேஜை மேல் தங்கள் சிலேட்டுகளை வைத்து விட்டுச் சென்றனர். டீச்சர் ஒவ்வொரு சிலேட்டையும் எடுத்துப் பார்த்து மார்க் போட்டார். கடைசியாக வைத்த பாலன் சிலேட்டில் சைபர் மார்க் போட்டிருந்தார். எல்லோரும் தங்களுடைய சிலேட்டுகளை டீச்சரிடமிருந்து வாங்கிக் கொண்டனர்.பாலன் மட்டும் எழுந்து நின்று கோபமாக பேசினான். “”என்ன டீச்சர்… நான்தான் கணக்கின் விடையை சரியாக எழுதியிருக்கிறேனே… எனக்கு எதுக்காக சைபர் மார்க் போட்டிருக்கீங்க..?” பத்மாவதி டீச்சர் அமைதியாகப் பதில் சொன்னார். “”உனக்கு மட்டும் சைபர் மார்க் போடலே. பாபுவுக்கும் சைபர் மார்க்தான் போட்டிருக்கேன். அவன் மவுனமாக உட்கார்ந்திருக்கிறான். நீ மட்டும் ஏன் கோபப்படுறே…” “”அவனைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. எனக்கு ஏன் சைபர் மார்க் போட்டீங்க…” என்று மறுபடியும் கோபமாகவே கேட்டான் பாலன்.
பாலன் பேசுவது மற்ற மாணவர்கள் அச்சத்தோடு பார்த்தார்கள்.”"நீ உனக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருந்த கணேஷைப் பார்த்து காப்பியடிச்சே. போர்டிலே நான் போட்டிருந்த கணக்கை உங்க சிலேட்டிலே எழுதி அதற்குரிய விடையை எழுதணும். இதிலே என்னக் கஷ்டம். வாய்ப்பாடு ஒழுங்கா படிச்சிருந்தா எல்லோரும் கணக்கை சரியாகப் போட்டிருக்கலாம். நீ வீட்டிலே வாய்ப்பாடு படிக்கிறதில்லே போலிருக்கு. அதனால்தான் பக்கத்திலே உட்கார்ந்திருந்த கணேஷைப் பார்த்துக் காப்பியடிச்சிருக்கே. நீ காப்பியடிச்சதினாலே உனக்கு சைபர் மார்க் போட்டேன்” என்றார் டீச்சர்.
பாலனின் மனம் வேறு கோணத்தில் திரும்பியது. “”சரி… அப்புறம் பாபுவுக்கும் ஏன் சைபர் மார்க் போட்டீங்க. அவன் நல்லா கணக்குப் போட்டிருப்பானே…” என்று கேட்டான் பாலன்.புன்முறுவலுடன் பாலனை மடக்கினார் டீச்சர். “”அவன் நல்லா படிப்பானா..? உனக்குத் தெரியுமா..?” “”நல்லா தெரியும். அவன் நல்லா படிப்பான். அதனால்தான் எனக்கு அவன்மேல் பொறாமை. எப்படியாவது அவன்கிட்டே வம்பளப்பேன்” என்றான் பாலன்.”
“பாலன்… இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமா இல்லையா. நல்லா படிக்கிற பையனைப் பார்த்து, அவனைப் போல நாமும் நல்லா படிச்சு அதிக மார்க் வாங்கணும்னு நெனைக்கிறது தானே நியாயம். நீ ஏன் அவன் மேலே பொறாமைப்படுறே. அவன் பென்சிலை உன்னுடையதுன்னு ஏன் பொய் சொல்லுறே..?” பாலனின் முகம் வாடியது.”"அது எப்படி டீச்சர் உங்களுக்குத் தெரியும்..?” என்று முகத்தில் அசடு வழியக் கேட்டான் பாலன்.”"உன் முகம் காட்டிக் கொடுத்து விட்டது. அது மட்டுமில்லே… நேற்று நான் எழுதுபொருள் வாங்குவதற்காகப் போயிருந்த கடையில் பாபுவின் அப்பா புதிதாக பென்சில் வாங்கியதைப் பார்த்தேன்” என்றார் டீச்சர்.பாலனின் மனம் அமைதி பெறவில்லை.
“”எல்லாம் சரி, பாபுவுக்கு ஏன் சைபர் மார்க் போட்டீங்க. அதை மட்டும் சொல்லிடுங்க” என்றான். மறுபடியும் டீச்சர் முகத்தில் புன்முறுவல்.”"சொல்றேன். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.
இந்தச் சின்ன வயசில உங்ககிட்ட பொறாமைக் குணம் இருக்கவே கூடாது. போட்டி மனப்பான்மை இருக்கலாம். அதில் தவறு இல்லை. எல்லாருமே நல்லா படிச்சு நெறைய மார்க் வாங்கணும்னு நினைக்கணும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. கணக்கை எல்லோரும் சிலேட்டில போட்டுக்கிட்டு இருந்தப்ப பாபுவுக்கு பக்கத்திலே உட்கார்ந்திருந்த பையன் சேகர் பல்பத்தை எடுத்து வரல போலிருக்கு. உடனே பாபு தன்னோட பல்பத்தை பாதியை ஒடிச்சு சேகர்கிட்ட கொடுத்து உதவியதை நான் பார்த்தேன். அதனால்தான், பாபுவுக்கு சைபர் மார்க் போட்டு அவனுக்கு கோபம் வருதான்னு பார்த்தேன். ஆனா… பாருங்க, பாபுவுக்கு கோபம் வரலே.” இப்பொழுது கைகளைக் கட்டிக் கொண்டு பாபு எழுந்து நின்றான். “”டீச்சர்… எங்க அம்மா தினமும் என்கிட்டே சொல்லுவாங்க. மாதா, பிதா, குரு, தெய்வம்னு டீச்சரை தெய்வமா நெனைக்கணும். அவங்க சொல்றதைக் கவனிக்கணும். அப்படீன்னு தினமும் சொல்லுவாங்க. அதனால எனக்கு உங்க மேலே கோபமே ஏற்பட மாட்டேங்குது.”எல்லா மாணவர்களும் பாபுவை வியப்போடு பார்த்தனர்.
முன் வரிசையில் நின்றிருந்த பாலன் ஓடிச் சென்று பாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “”பாபு… பாபு… உன்னைப் போல எனக்கு ஒரு நண்பன் கெடைச்சா போதும். நான் நல்லா படிப்பேன். என்னை மன்னிச்சிடு பாபு. இனிமேல் யார் மேலேயும் பொறாமைப்பட மாட்டேன். இது சத்தியம்” என்றான். பாலனை தழுவிக் கொண்டான் பாபு.
கருத்துரையிடுக